அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு பள்ளி முன் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி, நவ.15: கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவை இதுவரை வழங்காததை கண்டித்தும், மேலும் பள்ளிக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்தும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி, பெரியசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.  பின்னர் மாணவர்களிடம் அனைத்து அடிப்படை வசதிகளை சில தினங்களில் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கமும் கலந்து கொண்டது.

Related Stories: