வீட்டுமனைகள் வரன்முறைபடுத்த 16ம் தேதி கடைசி நாள் கமிஷனர் தலைமையில் ஆலோசனை வேலூர் மாநகராட்சி பகுதிகளில்

வேலூர், நவ.14: அங்கீகரிக்கப்படாமல் உள்ள வீட்டுமனைகள் வரன்முறைபடுத்த 16ம் தேதி கடைசி நாள் என்பதால் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைபடுத்தும் திட்டம் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் விலை குறைவான வீட்டு மனைகளை வாங்கி அதனை வரன்முறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அந்த மனைப்பிரிவுகளில் சாலை வசதி, தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும், மனைகளை வரன்முறைபடுத்தாததால், மனைபிரிவுகளை ஏற்படுத்தியவர்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு ஆளாகினர்.

அவர்களுக்கு 2018 மே மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டுமனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மனை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டும் அபாயம் ஏற்பட்டது. அதன்படி, வேலூர் மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, நிலத்தை வாங்கிய உரிமையாளர் அதனை சொந்தமாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பதிவுபெற்ற கட்டிட வரைபடவாளார்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வீட்டுமனை பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கமிஷனர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர்கள் மதிவாணன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

இதில் மாநகராட்சி பகுதிகளில் வரன்முறைப்படுத்தாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த இவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கடைசி நாள் 16ம் தேதியாகும். அந்தந்த பகுதிகளில் வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்த கட்டிட வரைபடவாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது பதிவு பெறாத வீட்டுமனைகள் இருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர்களை வைத்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத வீட்டுமனைகளுக்கு இதுவரை கூடுதல் அவகாசம் அளிக்கவில்லை. எனவே பொதுமக்கள் தங்களது வீட்டுமனை மனைபிரிவை அங்கீகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: