நிலம் எடுப்பவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் ஆய்வு செய்த கலெக்டர் தகவல் பொய்கையில் ரிங்ரோடு அமைக்க

அணைக்கட்டு, நவ. 14: பொய்கையில் ரிங் ரோடு அமைக்க நிலம் எடுப்பவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என்று ஆய்வு செய்த கலெக்டர் ராமன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட பொய்கை அடுத்த பிள்ளையார்குப்பம், புத்தூர் பகுதியில் ரிங்ரோடு அமைப்பதற்காக அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்து கற்களை பதித்துள்ளனர். இந்த விவசாய நிலங்களை அழித்து சாலை அமைத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் உடனே நிறுத்துமாறு விவசாயிகள் கூறியுள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பணிகள் நடந்து வந்துள்ளது. எனவே, அங்கு ரிங்ரோடு அமைக்க கூடாது என கிராம மக்கள் நேற்று முன்தினம் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர். அதன்பேரில் நேற்று கலெக்டர் ராமன், டிஆர்ஒ பார்த்தீபன், சப்-கலெகடர் மெகராஜ், தாசில்தார் ஹெலன்ராணி ஆகியோர் அங்கு சென்று அளவீடு செய்துள்ள இடத்தை ஆய்வு செய்து அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது ஊசூரிலிருந்து புத்தூர், பூதூர், நரசிங்கபுரம், நாட்டார்மங்கலம் வழியாக நாற்கர சாலையை அகலப்படுத்தினாலே போதும், இந்த ரிங்ரோடு திட்டத்தை கைவிட வேண்டும். வீடுகள், விவசாய நிலங்களை அழித்து எங்கள் வாழ்வாதாரத்தை கெடுத்து தான் சாலை போட வேண்டுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு, கலெக்டர் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரிங்ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவ்வாறு வீடுகள், நிலங்கள் இருந்தால் அதற்கு பதில் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும்’ என்றார். இதனை ஏற்காத மக்கள் வேறு வழியில் சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமாரபாண்டியன், மண்டல துணை தாசில்தார் பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வாளர் தேவிகலா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: