ஆத்தூர் விவசாயிகளுக்கு மரம் வளர்க்க மானியம்

ஆத்தூர், நவ.8:  ஆத்தூர் பகுதியில் மரம் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.இது குறித்து ஆத்தூர் வேளாண் உதவி இயக்குனர்(பொ) வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 20 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே காடு காணப்படுகிறது. மழை மும்மாரி பெய்ய குறைந்த பட்சம் 30 சதவீத நிலப்பரப்பில் மரங்கள் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதத்தில், தேசிய எண்ணெய்வித்து எண்ணெய் பனை இயக்கம், மரம் சார்ந்த எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு 400 வேப்ப மரங்கள் நடவு செய்ய ₹17 ஆயிரமும், 500 புங்க மரங்கள் நடவு செய்ய ₹20 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. பராமரிப்பு மானியமாக ₹2 ஆயிரமும், ஊடுபயிர் செய்ய ₹1000 மானியமாக வழங்கப்படுகிறது.

 தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம், ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்ப்பனை இயக்கம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டம், கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்ப்பனை இயக்கம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தில், பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு,  இருவாரத்திற்கு ஒருமுறை வரும் உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: