வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயதான மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

சேலம், அக்.12: சேலம் அரசு கலைக்கல்லூரியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயதான மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 2019 ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு, 18 வயது நிரம்பிய இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், பெயர் நீக்கம், திருத்தம் மேற்கொள்ள மற்றும் முகவரியை மாற்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 11 தொகுதிகளில் உள்ள 3,288 வாக்குச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம் நடந்தது.

பெயரை சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி வருகின்றனர்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 42,854 பேரும், பெயர் நீக்க 15 ஆயிரம் பேரும் என மொத்தம் 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே, சேலம் அரசு கலைகல்லூரியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். டவுன் தாசில்தார் மாதேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். இதில், பேராசிரியர் பழனிசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 18 வயதான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

Related Stories: