பெரம்பலூரில் குடியரசுதின விளையாட்டு போட்டி

பெரம்பலூர்,அக்.12: பெரம்பலூரில் மண்டல அளவில் 61வது குடியரசுதின, தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இன்று (12ம்தேதி) நிறைவுவிழா நடக்கிறது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர், கரூர், அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மண்டல அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று மாலை தொடங்கின. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள பயிற்றுநர் கோகிலா வரவேற்றார்.  பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் முதல்நாளான நேற்று 5000 மீட்டர் ஓட்டம், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன. 14 வயதிற்குட்பட்டோருக்கு கோலூன்றி தாண்டுதல் நடத்தப்படவில்லை. 2ம்நாளான இன்று (12ம் தேதி) தடகள போட்டிகளில் இதர போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைக்கிறார். இதில் பெரம்பலூர், கரூர், அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களில் ஏற்கனவே 14,17,19 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் என ஒவ்வொரு போட்டிக்கும் 4 கல்வி மாவட்டங்களில் இருந்து தலா 8 பேர் இந்த மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதில் வெற்றிபெறுவோருக்கு போட்டிகளின் முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பெரம்பலூர் தொகுதி எம்பி மருதராஜா, சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி, எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

Related Stories: