முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ஊசூர் அருகே அரசுப்பள்ளியில்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர், அக்.12: ஊசூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை 340 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஊசூரை சேர்ந்த சதீஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் இதுகுறித்து கடந்த 9ம் தேதி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை சத்தியபிரபா, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினாராம்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரித்தனர். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி புலேந்திரன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் உடற்கல்வி ஆசிரியர் சதீஷை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று உத்தரவிட்டார்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடற்கல்வி சதீஷ்குமார், ஏற்கனவே ஊசூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணி மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: