திருப்புத்தூரில் அரசு பஸ் டிரைவர், கன்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

திருப்புத்தூர், செப். 21:  திருப்புத்தூரில் நேற்று மாலை அரசுப் பஸ் டிரைவர் மற்றும் கன்டக்டரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பஸ் மதுரையிலிருந்து காரைக்குடிக்கு நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது திருப்புத்தூர் அருகே மார்க்கண்டேயன்பட்டியைச் சேர்ந்த விஜயன் (21), இவரது சகோதரர் ரமேஷ் (23) இரண்டு பேரும் நேற்று மாலை திருப்புத்தூருக்கு பயணச்சீட்டு வாங்கி பயணித்துள்ளனர். திருப்புத்தூர் தாண்டி தம்பிபட்டி என்ற இடம்வரை இருவரும் இறங்காததைக் கண்ட கன்டக்டர் நவநீதகிருஷ்ணன் இருவரையும் இறங்குமாறு கூறினார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து டிரைவர் வடிவேல் மற்றும் கன்டக்டர் நவநீதகிருஷ்ணனைத் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பஸ்சில் வந்த மற்றொரு பணியாளர் மற்றும் பயணிகள் சேர்ந்து விஜயனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கன்டக்டர் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கிருந்து தப்பி ஓடிய ரமேஷ் என்பவரைத்தேடி வருகின்றனர்.

Related Stories: