எச்.ராஜாவை கைது செய்ய கோரி இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

புதுக்கோட்டை,செப்.19: எச்.ராஜாவை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள்  பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதை கண்டித்து தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து பணியாளர்களும் நேற்று மதியம் 1 மணி முதல் அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல திருக்கோயில் பணியாளர்களும் மதியம் 1 மணிக்கு பிறகு பூஜையை தவிர மற்ற பணிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு இந்து அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தலைவர் பாரதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.அறந்தாங்கி: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் கண்ணன் தலைமையில், ஆய்வாளர் பிரகாஷ் முன்னிலையில் பணியாளர்கள் அறநிலையத்துறையினர் மீது அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று பகல் ஒரு மணி முதல் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல மீமிசல் கல்யாணராமசாமி கோயில், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: