வரத்து குறைவால் விலை கிடுகிடு கனகாம்பரம் கிலோ ரூ1000

மதுரை, ஆக. 14: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனகாம்பரம் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே விளைச்சல் குறைவால் இங்கிருந்து வரும் கனகாம்பரம் வரத்து பெருமளவில் சரிவடைந்துள்ளது. அதேநேரத்தில் தொடர் விசேஷ தினங்களால் அதன் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் சுந்தர் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாக வறட்சி காரணமாக செடியிலேயே பூக்கள் உதிர்ந்து விட்டது. இதனால், விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டில் வரத்து குறைந்தது.

தற்போது, ஆடி மாதம் முடிவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் வரத்து அதிகரித்து விலை குறைந்து விற்பனையாகிறது,’’ என்றார். பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்): கனகாம்பரம் ரூ.1000, மல்லிகை ரூ.400, முல்லை ரூ.300, செவ்வந்தி ரூ.120, அரளி ரூ.250, ரோஜா ரூ.80, பிச்சி ரூ.300, வில்வம் ரூ.40, பட்டன்ரோஸ் ரூ.120, கஞ்சா பூ ரூ.40, துளசி ரூ. 40, மரிக்கொழுந்து ரூ. 70, தாமரை 5 பூக்கள் ரூ.20

Related Stories: