மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க பயன்படாத அரசு கட்டிடங்கள் ஒதுக்கீடு

கடலூர், ஆக. 13:   மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்திய  மாற்றத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆட்சியர் தண்டபாணி தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்ற விகிதத்தில் குழுக்கள் அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்து மேம்பாடு அடைய உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதியுடன் பெட்டிக்கடை வைத்து மாணவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யவும், புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்களில் தேவையான கைத்தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுதல். காகிதப்பை செய்வது, தையல் பயிற்சி போன்றவற்றின் மூலம் போதுமான வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பாடு செய்ய தயாராக உள்ளது.

அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள் ஆகியவற்றில் மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அலுவலகங்களில் டெலிபோன் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் ஆகிய வேலைகளுக்கும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். பயன்படாத அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய ஆவன செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பரிமளம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: