கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

கும்பகோணம், ஆக. 7:  கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.1.5 கோடி மதிப்பில் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் 550 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு நபார்டு வங்கி உதவியுடன் கல்வித்துறை மூலம் ரூ.1.5 கோடியில் 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் எம்எம்ஏ ராம.ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிவழகன், கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் பாப்பம்மாள் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கவிதா, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சின்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமையாசியர் சித்ரா நன்றி கூறினார்.

Related Stories: