பரங்கிப்பேட்டை பகுதியில் சுருக்குமடி வலை பயன்படுத்தாததால் மீன்பிடி தொழில் களை இழந்தது

புவனகிரி, ஜூன் 21: பரங்கிப்பேட்டையில் அண்ணங்கோயில் என்ற இடத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும் சின்னூர், புதுபேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவர். இங்கிருந்து மீன்களை சிறு வியாபாரிகள் வாங்கி சென்று சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகளும் மீன்களை ஏலத்தில் எடுத்து கோவா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பர். சுமார் 2 மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு, கடந்த நான்கு தினங்களாகத்தான் மீனவர்கள் இப்பகுதியில் கடலுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் போதிய மீன்கள் கிடைக்காததால் இப்பகுதியில் மீன்பிடி தொழில் களை இழந்துள்ளது.

குறிப்பாக மீனவர்கள் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறும் மீனவர்கள், இதுகுறித்து அரசிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதனால் கடலுக்கு சென்றாலும் அதிக மீன்கள் கிடைக்காது என்பதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே வெளி மாநிலங்களுக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல், ஒருசில வாகனங்கள் மட்டுமே செல்கிறது. இதனால் மீன்பிடி தொழில் இப்பகுதியில் நலிவடைந்து, மீனவர்களும், மீன் வியாபாரிகளும் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.

இதுபற்றி மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரியான பரங்கிப்பேட்டையை சேர்ந்த செழியன் என்பவர் கூறியதாவது:

சுமார் 20 வருடங்களாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்திதான் மீன்பிடித்து வந்தோம். ஆனால் தற்போது சுருக்கு வலைகளை பயன்படுத்தக் கூடாது என கூறுகின்றனர். இதனால் மீனவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதை நம்பி மீனவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர். அவர்களால் வங்கி கடனை செலுத்த முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், நாகை மாவட்டங்களிலும், பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் இந்த வகையான வலைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு மட்டும் தடை விதிக்கின்றனர். இதனால் அண்ணங்கோயில் மீன் இறங்கு தளத்துக்கு பெரும்பாலான படகுகள் வராமல் பழையார் போன்ற ஊர்களுக்கு சென்று விடுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி கணிசமாக குறைந்து விட்டது. அதனால் மீனவர்கள் பலரும் துயரத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மீன்பிடி தொழில் மேம்படும். மீனவர்கள் வாழ்வாதாரம்

செழிக்கும் என கூறினார்.

Related Stories: