சாதி சான்றிதழ் வழங்க கோரி குடுகுடுப்பை அடித்து போராட்டம்

கடலூர், ஜூன் 21: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வம் தலைமையில் சுமார் 100 பேர் வந்தனர். கணிக்கர் வகுப்பை சேர்ந்த இவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்ததும் தங்களது பாரம்பரிய தொழிலான குடுகுடுப்பை வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடுகுடுப்பு வாசிப்பை நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கணிக்கர் வகுப்பை சேர்ந்த தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுவை ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் தொரப்பாடி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜனகராஜ் தலைமையில் ஆட்சியர் தண்டபாணியை சந்தித்து மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். எஸ்டி கணிக்கர் வகுப்பை சார்ந்தவர்கள். எங்களுக்கு இதுநாள் வரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கல்வி அறிவு பெறுவது தடையாகவும் உள்ளது. எனவே கணிக்கர் வகுப்பு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories: