‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: ‘பாரத் பந்த்’ போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா (வயது 88) இன்று சென்னையில் காலமானார். பிரபல டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான காஸ்ட்யூம்ஸ் கிருஷ்ணா, சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், திரைத்துறை பிரபலங்களின் காஸ்ட்யூம் டிசைனராகவும் கிருஷ்ணா பணியாற்றி உள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் மாதாசு கிருஷ்ணா. கடந்த 1954ல் ஆடை வடிவமைப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடர்ந்த அவர், என்டிஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, வாணி, ஜெயசுதா, ஜெயப்பிரதா, தேவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிமைப்பாளராக இருந்துள்ளார். திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் ஆலோசனையின் பேரில், ‘பாரத் பந்த்’  படத்தில் முதன் முறையாக வில்லனாக அறிமுகமானார். சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கிருஷ்ணாவின் மறைவு, தெலுங்கு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: