அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி: 11 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்

லிட்டில் ராக்: அமெரிக்காவின் அர்கன்சாஸ், இல்லினாஸில் வீசிய சூறாவளியினால் வீடுகள், ஷாப்பிங் மால்கள் சேதமடைந்துள்ளன. சினிமா தியேட்டர் ஒன்றும் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் சூறாவளி வீசத்தொடங்கியது.இதில் அங்கிருந்த கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் பெயர்த்தெறியப்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாலைகளில் முறிந்து விழுந்தன. ஏராளமான வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. லிட்டில் ராக் பகுதியில் சூறாவளியால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அர்கன்சாஸின் வடகிழக்கே உள்ள வியான்னே நகரையும் சூறாவளி புரட்டி போட்டது. இங்கு பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. இல்லினாய்சில்  சூறாவளியின் காரணமாக சினிமா தியேட்டரின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. சிகாகோவில் இருந்து வடமேற்கே 113 கி.மீ. தொலைவில் உள்ள  பெல்விடேர் நகரத்தில் அப்பல்லோ தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது அங்கு 260 பேர் திரண்டு  இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூறாவளியினால் சுமார்1லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Related Stories: