ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

திருவள்ளூர்: ரேசன் கடத்தலை தடுக்கும் பொருட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் எஸ்.பி. கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பெரிய ஓபுளாபுரத்தில் 4 டன் எடை கொண்ட ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேற்கொண்ட சோதனையில்  பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார், முத்து மற்றும் குமார் ஆகியோர் பொது மக்களிடமிருந்து ரேசன் அரிசியை  ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து  முத்து மற்றும் குமார் ஆகியோரை கடந்த 19ம் தேதி கைது செய்தனர்.  இதில் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குமார் என்பவரை கலெக்டர் உத்தரவின்பேரில்  குண்டர் சட்டத்தின் கீழ் குமார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: