ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது

 

சென்னை: திருச்சியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ெமன் பொறியாளர் ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் புத்தாண்டை சொந்த ஊரில் முடித்துவிட்டு நேற்று அதிகாலை சென்னைக்கு வந்துள்ளார். பிறகு தனது அறைக்கு செல்ல புரசைவாக்கம் தாச பிரகாஷ் பகுதிக்கு வந்து ரேபிடோ மூலம் கார் புக் செய்துள்ளார். கார் வருவதற்கு சிறிது நேரம் ஆனதால் அவர் சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஐடி பெண்ணை பார்த்த உடன் அவர் அருகில் சென்று பேச்சு கொடுப்பது போல் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரமோத் யாதவ்(35) என்றும், இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வந்தது தெரிந்தது. பணி முடிந்து நேற்று அதிகாலை வரும் போது தனியாக ஐடி பெண் ஊழியர் நின்று இருந்ததை பார்த்துள்ளார். அப்போது சாலையில் யாரும் இல்லாததால் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிடலாம் என்று நினைத்து பாலியல் தொந்தரவு ெகாடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து, பெண் ஐடி ஊழியர் அளித்த புகாரின் படி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடியாக ஜார்க்கண்ட் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: