திருமலை: கள்ளக்காதலை கண்டித்த கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் நாராயண்(32). இவரது மனைவி பந்திதா (27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வேலை நிமித்தமாக குடிபெயர்ந்து நாச்சாரம் பகுதியில் உள்ள ஓல்ட் மீர் பேட் ஷாந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நாராயண் பிளம்பராக வேலை செய்து வந்தார். பந்திதா அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக உள்ளார்.
இந்தநிலையில் நாராயண் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியில் வசிப்பவர் பீகாரைச் சேர்ந்த வித்யாசாகர்(25). இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பந்திதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நாராயணின் கொடுமைகளை அறிந்த வித்யாசாகர், பந்திதாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இவ்வாறு அடிக்கடி சந்தித்த நிலையில் அவர்களிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையறிந்த நாராயண், தனது மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது.
இதனால் நாராயண், மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பந்திதா, தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் கணவர் நாராயணை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்கு கள்ளக்காதலன் வித்யாசாகரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 1ம்தேதி இரவு நாராயணை வித்யாசாகர் நைசாக பேசி மல்லாபூர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். நள்ளிரவு போதையில் வீட்டுக்கு வந்த நாராயண், வழக்கம்போல் பந்திதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வித்யாசகாரும், பந்திதாவும் சேர்ந்து இரும்புக் கம்பியால் நாராயணை சரமாரி தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நாராயண், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து பந்திதா கதறி அழுதபடி அங்குள்ளவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து எனது கணவரை அடித்து கொன்றுவிட்டனர் எனக்கூறியுள்ளார். ஆனால் நாராயண் உறவினர்களுக்கு பந்திதா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி பந்திதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாராயண் தினமும் மதுபோதையில் வந்து தன்னை தாக்கியதாகவும், இதனால் தன்னால் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு வித்யாசாகர் ஆறுதல் கூறினார். இதனால் எங்களிடையே பழக்கம் ஏற்பட்டது. எங்களது கள்ளத்தொடர்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் நாராயணை அடித்துக்கொன்றோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பந்திதா, வித்யாசாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
