மதுராந்தகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். முன்னதாக அலுவலக மேலாளர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமில் முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் சுகாதார பணிகளை மேற்கொள்வது, குப்பைகளை மேலாண்மை செய்வது போன்றவை குறித்து பயிற்சியளித்தார்.

அதனைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இதில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை இணைந்திராத தூய்மை காவலர்களை காப்பீட்டு திட்டத்தில் இணைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் மதுராந்தகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: