கடுமையாக போராட தயாராகுங்கள் அதிக வெற்றி பெறும் போது எதிர்ப்புகளும் அதிகரிக்கும்: கட்சியினருக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘‘அடுத்தடுத்து அதிகமான தேர்தலில் பாஜ வெற்றி பெறும் போது, எதிர்க்கட்சிகளிடம் இன்னும் அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கடுமையாக போராட தயாராகுங்கள்’ என கட்சியினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜ எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் கட்சி எம்பிக்களும் பங்கேற்றனர்.

சமீபத்தில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களிலும் மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்ததற்காக பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும் போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். அவர்களின் தீவிரமான, தரம் தாழ்ந்த தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கடுமையாக போராட தயாராக இருங்கள். ஒன்றியத்தில் பாஜ ஆட்சியின் 9ம் ஆண்டு நிறைவையொட்டி வரும் மே 15 முதல் ஒரு மாதத்திற்கு ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றி மக்களிடம் விளக்கி விளம்பரப்படுத்துங்கள். அரசியல் சாராத காரணங்களுக்காகவும் அரசியல்வாதிகள் உழைக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’’ என்றார்.  

* பா.ஜ மட்டுமே இந்தியாவுக்கான கட்சி டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்தின் புதிய விரிவாக்க கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஒரு சிறிய அரசியல் அமைப்பில் இருந்து உலகின் மிகப்பெரிய அமைப்பாக பாஜ  உயர்ந்ததற்கு கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகமே காரணம் .  வடக்கிலிருந்து தெற்கிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் உள்ள ஒரே பான்-இந்திய  கட்சி பா.ஜதான்.  நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே அதன் ஒரே குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: