சவுதி அரேபியாவில் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பேருந்து : ஹஜ் யாத்ரீகர்கள் 20 பேர் பலி; 29 பேர் படுகாயம்!!

ரியாத்: சவுதி அரேபியா நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மெக்கா புனித பயணம் மேற்கொண்ட 20 பேர் உயிரிழந்தனர்.இஸ்லாமியர்களின் புனித பூமியாக மெக்கா கருதப்படுகிறது. இதனால் மெக்காவுக்கு செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம் மக்களின் கனவாக உள்ளது. இந்த நிலையில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பயணிகளுடன் பேருந்து ஒன்று மெக்கா நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த கோர விபத்து ஏமன் நாட்டின் எல்லையில் உள்ள ஆசிர் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது..இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 29 பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பேருந்தில் பிரேக் பிடிப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல்,  2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதீனா அருகே மற்றொரு கனரக வாகனம் மீது பேருந்து மோதியதில் சுமார் 35 வெளிநாட்டினர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

Related Stories: