கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிஎப் பணத்திற்கு அதானியால் ஆபத்து: பங்குகள் கடும் வீழ்ச்சிக்குப் பிறகும் முதலீடுகளை தொடரும் இபிஎப்ஓ

புதுடெல்லி: பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இன்னமும் அதானி நிறுவன பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) தொடர்ந்து முதலீடு செய்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் அறிக்கையை தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில், நாடு முழுவதும் 27.73 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை பராமரித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) இன்னமும் அதானி குழுமத்தின் 2 நிறுவன பங்குகள் மீது தொடர்ந்து முதலீடு செய்து வரும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடந்த 3 மாதத்தில் 55%, அதானி போர்ட்ஸ் பங்கு 23% சரிந்துள்ளன. ஆனாலும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பணம் இன்னமும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக இபிஎப்ஓ அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டால் மட்டுமே முதலீடு வாபஸ் பெறப்படும். இல்லாவிட்டால் வரும் 30ம் தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்திற்கு அதானி பங்குகளை தொடர்ந்து இபிஎப்ஓ வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கிடையே, வரும் நிதியாண்டிற்கான இபிஎப்ஓ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான அறங்காவர்கள் குழுவின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதானி நிறுவன பங்கு முதலீட்டில் இருந்து வெளியேறுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவால், அதில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ள காரணத்தால், இந்த ஆண்டு பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: