தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

பிரயாக்ராஜ்: கள்ளத்தொடர்பை கண்டித்தும் கேட்காததால் தனது மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தையை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் கர்ச்சனா பகுதியை சேர்ந்த 58 வயதுடைய தையல் தொழிலாளியின் 19 வயது மகள், அதேபகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அந்த நபருடன் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் அவரது மகள் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது மகளை கொன்றுவிட திட்டமிட்ட அவர், கடந்த 23ம் தேதி மகளை தாக்கினார். அதனால் அந்தப் பெண் மயங்கி கீழே விழுந்தார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட தந்தை, தனது மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்றார். பின்னர் தனது மகள் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறினார்.

அவர்களும் அந்த பெண்ணின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்றனர். வழக்கம் போல் அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பெண்ணின் உறவினர்களில் ஒருவர், அந்தப் பெண் உடல்நிலை பாதிப்பால் உயிரிழக்க வாய்ப்பில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் போலீஸ் அதிகாரி அஜீத் சிங் சவுகான் கூறுகையில், ‘கர்ச்சனா பகுதியை சேர்ந்த இளைஞருடன், அந்தப் பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டித்த தந்தை, தனது மகளை அடித்துள்ளார். மயக்கமடைந்து கீழே விழுந்த மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தான் செய்த கொலையை தந்தை ஒப்புக் கொண்டதால், அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: