கலிபோர்னியாவில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கிய கோயிலில் 2 பேர் மீது துப்பாக்கிசூடு நடந்தது. துப்பாக்கி குண்டு துளைத்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செக்ராமென்ட்டோ காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், நடந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு தனி நபர்களுக்கு இடையேயான வெறுப்பின் காரணமாக நடந்துள்ளது. இது வெறுப்பினால் நடந்த இனவாத குற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய சூழலில் அது வெறுப்புக் குற்றமல்ல தனிநபர் பிரச்சினை என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: