விமானிகளின் சாதுர்யத்தால் ஏர் இந்தியா, நேபாள விமானம் நடுவானில் மோதல் தவிர்ப்பு

காத்மாண்டு:  ஏர் இந்தியா மற்றும்  நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள்  பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமானிகளின் சாதுர்யத்தால் விமானங்கள் நேருக்குநேர் மோதுவது தவிர்க்கப்பட்டது.  கடந்த வெள்ளிக்கிழமை காலையில், கோலாலம்பூரில் இருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  காத்மாண்டு நோக்கி வந்தது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 19 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. நேபாள விமானம் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் ஒரே பகுதியில் அருகருகே பறந்து கொண்டிருந்ததால் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ரேடார் கருவியின் எச்சரிக்கையையடுத்து இரண்டு விமானங்களின் விமானிகளும் உஷாராயினர். இதை தவிர்ப்பதற்காக நேபாள விமானம் 7 ஆயிரம் அடி உயரத்தில் தாழ்வாக பறக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து துறையின் செய்தி தொடர்பாளர் நிரோலா கூறுகையில்,‘‘ 2 விமானங்களும் நடுவானில் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், ரேடார்  கருவி எச்சரிக்கையினால்  விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்து விட்டனர்.   இரண்டு விமானங்களும் அருகருகே பறந்து கொண்டிருப்பதை கவனிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக  விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின் 2 ஊழியர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Related Stories: