ஈரான்: ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரானின் முன்னாள் இளவரசர் Reza Pahlavi, ‘இதுவே கடைசிப் போர்’ என்று முழக்கமிட்டு மக்களைத் திரள அழைப்பு விடுத்ததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் சூழலில், வன்முறையில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைத் தடுக்க, ஈரானில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவினால், அமெரிக்கா சும்மா இருக்காது என்றும், ஈரான் அரசு கடும் விளைவுகளைச் சந்திக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
