வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதை அதிரடியாக நிறுத்தினார். ஐநா மனித உரிமை அமைப்புகள், யுனெஸ்கோ உள்ளிட்ட முக்கிய அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப், அதில் உலக தலைவர்கள் மத்தியில் ஐநாவை நேரடியாக விமர்சித்தார்.
இந்நிலையில், ‘அமெரிக்காவின் நலன்களுக்கு முரணான சர்வதேச அமைப்புகள், மாநாடுகள், ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்காவை விலக்குதல்’ என்ற உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுகிறது. இதில் 31 அமைப்புகள் ஐநா நிறுவனங்கள் என்றும் 35 அமைப்புகள் ஐநா அல்லாதவை என்றும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்புகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட ஆதரவு வழங்குவது அமெரிக்காவின் நலன்களுக்கு தேவையற்றது, முரண்பாடனது என்பதால், அனைத்து நிர்வாக துறைகள் மற்றும் நிறுவனங்கள் அந்த அமைப்புகளிலிருந்து விலகுவதை விரைவில் செயல்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதில் இந்தியா-பிரான்ஸ் தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணியும் அடங்கும்.
