வாஷிங்டனில் இந்திய தூதர், அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல்

வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து,கடந்த 22-ம்தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இந்திய தூதரக அலுவலகத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றி உள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதே போல் அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில்,அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால், நூற்றுக்கணக்கான காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துணிகளை கையில் ஏந்தியபடியும் காணப்பட்டனர்.அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை அவர்கள் மிரட்டியுள்ளனர். தூதரக அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்தனர்.  ஆர்பாட்டத்தின் போது இந்தியாவை சேர்ந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் நிருபரையும் கடுமையாக திட்டி அவரை தாக்கியுள்ளனர். நிலைமை மோசமானதால் இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

* கனடா தூதருக்கு சம்மன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வாரம் கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சர்ரேயில் உள்ள தாஜ் பார்க் கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் சமீர் கவுஷல் என்பவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.இதனிடையே பிரிட்டிஷ் கொலம்பியா சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி டெல்லியில் உள்ள கனடா தூதருக்கு ஒன்றிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: