குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தேடிய பிரபல ரப்பர் ஷீட் திருடன் கூட்டாளிகளுடன் கைது-1,150 ரப்பர் ஷீட், 300 கிலோ பாத்திரங்கள் பறிமுதல்

குலசேகரம் : குமரி மாவட்டத்தில் குலசேகரம்,  திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரப்பர் ஷீட் குடோன்கள் உடைக்கப்பட்டு ரப்பர் ஷீட்டுகளும், வாடகை பாத்திரங்கள் கடைகளில் பூட்டு உடைத்து உள்ளே இருந்த பாத்திரங்களும் திருடப்பட்டன.திருட்டு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் திசை திருப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலை இருந்தது. ஒரு சில இடங்களில் சிக்கிய  கைரேகைகள் அடிப்படையில் பழைய குற்றவாளிகள் கைவரிசை காட்டி இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

இதில் திற்பரப்பு பகுதியில் ரப்பர் ஷீட் திருட்டில்,  கைதேர்ந்த திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (34) என்பவர் தான் கைவரிசை காட்டியது உறுதியானது. தலைமறைவாக இருந்த ஜெகனின்  புகைபடத்துடன், போஸ்டர்களும் ஒட்டி அவரை பற்றிய தகவல்  தெரிவிக்குமாறு போலீசார் கேட்டு இருந்தனர். எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் ஜெகனை பிடிக்க எஸ்.ஐ. அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையில் போலீசார் சிம்சன், ராபர்ட், சார்லிஸ், வினோஜ், அலெக்ஸ், ஆல்பர்ட் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தனர். இந்த நிலையில் ஜெகன் திற்பரப்பு பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று காலை தனிப்படை போலீசார் சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஜெகனுடன், தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் செல்வன் (27) என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் செல்வன் மீது  ஏற்கனவே தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. தொடர்ந்து நடந்த விசாரணையில்,  இவர்களுடன் தொடர்புடைய புதுக்கடை பகுதியை சேர்ந்த  மகேந்திரகுமார் (49),  மருதங்கோடு கிளைன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும்  குலசேகரத்தில் 3 இடங்கள், திருவட்டாரில் 4 இடங்கள், கடையாலுமூடு  பகுதியில் ஒரு திருட்டு, மார்த்தாண்டத்தில் 2 திருட்டு சம்பவங்கள் என 10 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 1,150 கிலோ ரப்பர் ஷீட் பறிமுதல் செய்யப்பட்டது. 300 கிலோ எடையிலான பித்தளை மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே இந்த கும்பல் திருநந்திக்கரை பகுதியில் திருட செல்லும் போது தொழிலாளர்கள் விழித்து கொண்டதால் காரை விட்டு விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு பொருட்களை கொண்டு சென்ற டெம்போவையும் போலீசார் மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ஜெகன் கடந்த சில வருடங்களுக்கு முன், அரமன்னம் பகுதியில் கள்ளகாதலியுடன் சொகுசு வாழ்க்கையில் இருந்தார்.

 அப்போது திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் பிடித்து, ஜெகனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.பாளை சிறையில் இருக்கும் போது ஏற்கனவே பல  வழக்குகளில் சிக்கி கைதாகி சிறையில் இருந்த மகேந்திரகுமார், கார்த்திக் செல்வன், கிளைன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு கூட்டாளிகளாக மாறி திருட தொடங்கினர் என்பதும்  விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: