கோடை உழவு செய்தால் மண் வளம், விளைச்சல் பெருகும்-விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் அதிகாரிகள்

மதுரை : மதுரை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து நிலத்தை வளப்படுத்தி மண் வளம், விளைச்சலை பெருக்கி கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் வழிகாட்டுகின்றனர்.கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்று பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். மற்றவர்கள் நிலத்தை தரிசாக விடுவர். சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரி பயிர்களை இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவைகளும் கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன. கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.

மண் வெடிப்பை தடுக்கும்

மழைக்காலத்தில் செய்யும் உழவை விட கோடை காலத்தில் உழவு செய்வதுதான் முக்கியமானது. மழைக்கால உழவில் குளுமை மட்டும் இருக்கும். கோடை உழவில் குளுமை, வெப்பம் இரண்டும் இருக்கும். இதுதான் விவசாய மண்ணுக்கு முக்கியம். மேட்டுப்பகுதியில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும். இப்படி நான்கு முறை உழ வேண்டும். இப்படி உழுதால் மழைநீர் மண்ணுக்குள் இறங்கும்.

 வெப்பம் காரணமாக மண்ணின் மேற்புறத்தில் வெடிப்புகள் இருக்கும். அதனால் மண்ணின் சத்துக்கள் ஆவியாகிவிடும். இதை தடுக்க கோடை உழவு செய்ய வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட உயிர் சத்துக்கள் இரவு நேரத்தில் பூமி உள்வாங்கி குளிர்ச்சியாகும். மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை தாக்கிய பல்வேறு பூச்சிகள், புழுக்கள், அவைகளின் முட்டைகள், கூட்டு புழுக்கள் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்வதால் அவை கட்டுப்படுத்தப்பட்டு, ஏற்கனவே இருந்த களைகளும் அழிக்கப்படும்.

தழைச்சத்து அதிகரிக்கும்

விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய வல்லூநர்கள் வள்ளல் கண்ணன், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது: தற்போது கோடை மழையானது மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் இறுக்கம் தளர்த்தப்பட்டு காற்றோட்டம் மற்றும் நீர் பிடிப்புதிறன் அதிகரிக்க செய்கின்றது. ேமலும், முள்பருவத்தில் இடப்பட்ட களைக்கொல்லிகள் செயலிழக்க ெசய்கின்றது. மழை நீரானது வான்வெளியிலுள்ள நைட்ரேட் என்றும் வேதிப்போருட்களுடன் கலந்து மண்ணில் தழைச்சத்து அளவை அதிகரிக்க செய்கின்றது. களைகள் அழிக்கப்பட்டு இவை மக்கி மண்ணுக்கு இயற்கை உரமாகிறது.

கோடை உழவு செய்வதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்பட்டு பயிர் வளர்ச்சி மற்றும் பயிர் மகசூலுக்கு ஏற்றதாக அமைகின்றது. பங்குனி, சித்திரை மாதங்களில் பெறப்படும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வது மிக அவசியம். ஏனெனில், நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்கு செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறி விடும். மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதி படலம் அமைத்துவிட்டால், விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால், நிலத்தில் உள்ள ஈரத்தை ஆவியாக விடாமல், இப்புழுதி படலம் தடுத்துவிடும்.

பூச்சிகள் அழிக்கப்படும்

மேலும், கோடை உழவின்போது மேல் மண் துகள்களாகின்றன. இதனால் வெப்பத்தை உறிஞ்சும் மண், பின்னர் விரைவில் குளிர்ந்துவிடும். எனவே, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். கோடை உழவு செய்வதால் நிலத்தின் அடியிலுள்ள கூண்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி, மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழைநீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை உழவால் பல நன்மைகள் ஏற்படுவதால், ‘‘கோடை உழவு கோடி நன்மை” என கூறப்படுகிறது. எனவே, மதுரை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து, தங்களின் நிலங்களில் மழைநீரை சேமிப்பதுடன், பூச்சி- நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு கூறினர்.

Related Stories: