நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நாளை கைதாக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தகவல்: அரசை எதிர்த்து போராட ஆதரவாளர்களுக்கு அழைப்பு

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நாளை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். ஆனால் டிரம்ப் இவற்றை மறுத்து வந்தார். டிரம்ப் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவர் கடந்த 2006ம் ஆண்டில் தன்னுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல் கூறினார்.  இது பற்றி எதுவும் கூறாமல் மூடி மறைக்க அவருக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் மூலம்ரூ.85 லட்சம் வழங்கப்பட்டது.  

தற்போது வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அதிபரால் பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்களுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து நியூயார்க் மாவட்ட அட்டார்னி அல்வின் பிராக் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டால், முன்னாள் அதிபர் மீது குற்றவியல் வழக்கு தொடரும் முதல் சம்பவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘‘முன்னணி குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான தான் செவ்வாய்க்கிழமை(நாளை) கைது செய்யப்பட இருக்கிறேன். இந்த விசாரணை தன்னை குறிவைத்து பழிவாங்குவதற்காக, இனவெறி பிடித்த கருப்பினத்தை சேர்ந்த அட்டார்னி பிராக் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இன்னும் பொறுத்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் நம் முதுகில் உட்கார்ந்து கொண்டு நம்மை கொல்வார்கள். நாம் அதனை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. நாட்டை காப்பாற்ற வேண்டும். போராடு, போராடு, போராடு!!!,’’ என்று கூறியுள்ளார். ஆனால் டிரம்ப் ஊடக செய்திகளின் அடிப்படையிலேயே சமூக வலைதளத்தில் தான் செவ்வாய் கிழமை கைதாக இருப்பதாக பதிவிட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் சூசன் தெரிவித்தார்.

Related Stories: