காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு

சூலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நடுரோட்டில் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியை சேர்ந்த மாணவர் வினித் (21) என்பவர் மாணவியிடம் தனது காதலை தெரியப்படுத்தினார். ஆனால், மாணவி காதலை ஏற்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி, மெயின் ரோட்டில் பஸ்சுக்கு நின்றிருந்தபோது அங்கு வந்த வினித், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வினித், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து மாணவியை சரமாரியாக தாக்கினர். இதில், மாணவிக்கு வாய், கன்னம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின், வினித் அங்கிருந்து தப்பி ஓடினார்.

காயத்துடன் வீடு திரும்பிய மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவி சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வருகிறார்கள். காதலிக்க வலியுறுத்தி மாணவியை வாலிபர் தாக்கிய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: