சோழவரம் அருகே கோயில்களில் ஆய்வு: தகுதியுள்ள 26 பேர் அர்ச்சகராக நியமனம்.! அமைச்சர் சேகர்பாபு பேட்டி

புழல்: சோழவரம் அருகே ஞாயிறு கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது மற்றும் இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கான புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது, கோயில் குளத்தை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர், இக்கோயிலின் அருகே சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட லிங்கத்தையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அருமந்தை கிராமப் பகுதியில் உள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் எம்எல்ஏக்கள் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், சோழவரம் ஒன்றியக்குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், புழல் நாராயணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், இங்குள்ள ஞாயிறு திருக்கோயிலில் திருப்பணி முடிந்து 12 ஆண்டு காலம் கடந்த நிலையில், தற்போது திருப்பணிகளுக்காக ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைப்பு நிதி தொகை ₹520 கோடியாக உள்ளது. சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், அதற்கேற்றபடி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Related Stories: