அரக்கோணம் ரயில் நிலையத்தில் தங்க நகை இருப்பதாக எழுதப்பட்டிருந்தது கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியால் வெடிகுண்டு பீதி

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் தங்க நகை இருப்பதாக எழுதப்பட்டு கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியால் மக்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியடைந்தனர். பின்னர் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, மக்களை ஏமாற்ற மர்ம ஆசாமி டைல்ஸ் கல்லை அட்டை பெட்டியில் வைத்திருந்தது தெரியவந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் எப்போதும்  பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

 இந்நிலையில், ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு கவுன்டருக்கு அருகிலுள்ள மதில் சுவர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிய அளவிலான அட்டை பெட்டி கேட்பாரற்று இருந்தது. ஒரு சிலர் அருகே சென்று பார்த்தபோது, அந்த பெட்டியின் கவர் மீது, ஒரு நகைக்கடையின்  பெயரை எழுதி தாலிச்சரடு, கழுத்து செயின் என எழுதப்பட்டிருந்தது. இதனால் பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதியடைந்தவர்கள் இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், அந்த அட்டை பெட்டியை பாதுகாப்புடன் திறந்து பார்த்தனர்.

அப்போது, அதில் சிறிய டைல்ஸ் கல் துண்டுகள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். அத்துடன் அந்த பெட்டிக்குள் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அந்த சீட்டில் ‘அடுத்தவர் பொருட்களை திருடும் உங்களை போல் மானம் கெட்டவர்கள் இந்த உலகில் வாழ தகுதியில்லை. இப்படிக்கு கடவுளின் தோழன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பொதுமக்களை ஏமாற்றுவதற்காக மர்ம ஆசாமி யாரோ நகை இருப்பது போன்று அட்டை பெட்டியை வைத்து சென்றுள்ளார். அவர் யார்? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடிவருகிறோம். பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் எவ்வித பொருட்களையும் பொதுமக்கள் தொடக்கூடாது. உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றனர். ரயில் நிலையத்தில் நகை பெட்டியை போன்று வைத்து சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்களையும், போலீசாரையும் மர்ம ஆசாமி திணறடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: