ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலைய ஓட்டல்களில் உணவு தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்: மேயர் மகேஷ் அதிரடி உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம், மாவட்டத்தின் மிக முக்கியமான பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. குறைந்த இடத்தில் தான் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் பயன்பாட்டுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியில், புனரமைப்பு பணிகள் நடக்கிறது.

இதில் கழிவறைகள் சீரமைப்பு, இருக்கைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பஸ் நிலையத்தில் இருந்த இலவச கழிவறை இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கி பல மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தை பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இலவச கழிவறை இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடப்பதால், தற்காலிக கழிவறைகள் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவற்றில் போதிய தண்ணீர் வசதி கிடையாது. துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் யாரும் செல்வதில்லை.

இந்த நிலையில் இன்று காலை திடீரென மேயர் மகேஷ், அண்ணா பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஓட்டல்கள், டீ கடைகளில் தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள் தரமானதாக உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாள்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பஸ் நிலையத்தில் கட்டுமான பணியில் பாதியில் நிற்கும், இலவச கழிப்பிட கட்டுமானத்தை பார்வையிட்ட அவர், போதிய நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும் என உறுதி அளித்தார். அப்போது தற்காலிக கழிவறையில் துர்நாற்றம் வீசி, பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதை பார்த்த மேயர், தண்ணீர் வசதி கூட செய்யாமல் தற்காலிக கழிவறைகள் ஏன் வைத்தீர்கள். முறையாக ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் இருந்து என்ன பயன்? என கேள்வி எழுப்பினார். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் முறையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் இதில் கவனம் செலுத்துங்கள். மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என அறிவுரை வழங்கினார். பஸ் நிலையத்தில் பார்க்கிங் வசதி இல்லை என பயணிகள் கூறினர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது ஆணையர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரோசிட்டா திருமால், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும்

மேயர் மகேஷ் கூறுகையில், சுகாதார ஆய்வாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கழிவறைகள் சுத்தமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பஸ் நிலையத்தில் கழிவறை மற்றும் குடிநீர் வசதி மிகவும் அவசியம். கழிவறையை கூட சுத்தமாக வைத்திருக்க வில்லை என்றால் பயணிகள், மாநகராட்சியை தான் திட்டுவார்கள். எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: