திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ2.81 கோடி, 405 கிராம் தங்கம் 2 கிலோ வெள்ளி காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ2.81 கோடி, 405 கிராம் தங்கம், 2 கிலோ 385 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி, தை  மற்றும் மாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர்  முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதில் ரூ2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750 மற்றும் 405 கிராம் தங்கம், 2 கிலோ 385 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 25ம்தேதி உண்டியல் காணிக்கையாக ரூ2.71 கோடி கிடைத்தது. இதுவே அதிகபட்ச காணிக்கையாக இருந்த நிலையில் நேற்று ரூ2.81 கோடி கிடைத்தது. தற்போது இதுவே அதிகபட்ச காணிக்கை தொகையாக இருக்கிறது.

Related Stories: