ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் 2.2 கிலோ தங்கம், 18 கார்கள் பறிமுதல்: பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் பேட்டி

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் 2.2 கிலோ தங்கம், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது; ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் 2.2 கிலோ தங்கம், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 120 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.

89,000 பேரிடம் பணம் பெற்று ஹிஜாவு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹிஜாவு மோசடி வழக்கில் இதுவரை 52 குற்றவாளிகள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹிஜாவு நிறுவனம் தொடர்பான 162 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில்,  ஹிஜாவு நிறுவனம் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.எஃப்.எஸ். நிறுவனம் ரூ.6,000 கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ். நிறுவனம் தொடர்பான 791 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ். நிறுவன மோசடி தொடர்பாக நடத்திய சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,  680கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி, 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எல்ஃபின் நிறுவனம் ரூ.800 கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 11,000 முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில் 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ஃபின் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், எல்ஃபின் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் செய்யப்பட்ட முதலீடு முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

Related Stories: