நெருங்குது கோடை விடுமுறை; கொடைக்கானல் சாலையில் பாதுகாப்பான பயணத்திற்கு வழிசெய்யப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பழநி: கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் பழநி- கொடைக்கானல் சாலை பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வழிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு துவங்கி உள்ள நிலையில், இதர வகுப்புகளுக்கான தேர்வுகளும் விரைவில் துவங்க உள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இதை தொடர்ந்து கொளுத்தும் கோடையில் இருந்து தப்பிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல துவங்கி விடுவர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்றவை ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு மற்றும் பழநி என இரு வழிகளில் செல்லலாம். பழநியில் முருகன் கோயில் இருப்பதால் அனேகமானோர் பழநி வழியாகவே பயணம் செய்வர்.

இதனால் பழநி- கொடைக்கானல் சாலை ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் முதல் வாரம் வரை போக்குவரத்து மிகுந்த சாலையாக இருக்கும். இச்சாலையை தமிழக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களின் சுற்றுலா பயணிகளும் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை பழநியில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

இதில் 15 கிலோமீட்டர் சமவெளி பயணமும், இதர தொலைவு மலைப்பயணமாகவும் இருக்கும். இச்சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

சாலையின் அகலம் குறைவு, விளக்கு வசதி இல்லை மற்றும் இரவு நேர பயணம் போன்ற காரணங்களால் இச்சாலையில் ஆண்டுதோறும் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கின்றன. சராசரியாக ஆண்டுதோறும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் விபத்திற்குள்ளாகின்றன. இதில் அனேக விபத்துக்கள் இரவு நேரங்களிலேயே நிகழ்கின்றன. சீசன் துவங்கினாலே, விபத்துக்களுக்கான எண்ணிக்கையும் துவங்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே கோடை விடுமுறை காலங்களில் பழநி- கொடைக்கானல் சாலை பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வழிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கேரளாவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் கூறியதாவது: விபத்துக்களை குறைக்க கொடைக்கானல் மற்றும் பழநியில் இருந்து வாகனங்கள் இச்சாலையில் மாலை 7 மணிக்கு மேல் இயக்க அனுமதிக்க கூடாது. இதனை சாலையின் இருபுறமும் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மேலும், 64 கிலோமீட்டர் தூர இடவெளியில் எவ்வித முதலுதவி சிகிச்சை மையமோ, மீட்பு குழுவோ இல்லை. விபத்து ஏற்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குறைந்தது 2 மணிநேரம் ஆகிறது. இதனாலேயே உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகமாகிறது. எனவே, சீசன் நேரங்களில் மட்டுமாவது இக்குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். விரைவில் மாற்றுச்சாலை ஏற்படுத்தப்பட்டு, இச்சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: