ரயில்வே வேலை முறைகேடு வழக்கில் சம்மன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாத தேஜஸ்வி: அமலாக்கத்துறையின் 14 மணி நேர சோதனையால் கர்ப்பிணி மனைவிக்கு உடல்நலக்குறைவு

புதுடெல்லி: ரயில்வேயில் வேலை பெற்று தர குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் லாலு, ரப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தேஜஸ்வியின் டெல்லி பங்களா மற்றும் லாலுவின் 3 மகள்களுக்கு சொந்தமான வீடுகள் உட்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று பிற்பகலுக்கு முன்பாக ஆஜராகும்படி தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் தேஜஸ்வி ஆஜராகவில்லை. இதற்கு காரணம், டெல்லி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம் நடத்திய சோதனையால் தேஜஸ்வியின் கர்ப்பிணி மனைவிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேஜஸ்வி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

* லாலு குடும்பம் குறிவைக்கப்படுகிறது

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் நடத்தப்படும் சோதனையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். கடந்த 2017ம் ஆண்டிலும்  பாஜவிற்கு எதிரான அணியில் இருந்தபோது இதுபோன்ற விஷயங்கள் நடந்தன. நான் இப்போது மீண்டும் இங்கு வந்துள்ளதால் இந்த விஷயங்கள் மீண்டும் அரங்கேறுகின்றன. பாஜவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அடுத்த மக்களவை தேர்தலில் ஒற்றுமையாக போராட ஒப்புக்கொண்டால் நான் நிச்சயம் அங்கு இருப்பேன்” என்றார்.

* அதானியிடம் ஏன் விசாரிக்கவில்லை?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு ஓடியபோது மோடி அரசின் விசாரணை அமைப்புகள் எங்கே சென்றன? அதானி போன்ற தொழிலதிபர்களின் பொருளாதாரம் உயரும் போது அவர்களிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை’ என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: