காஸ் விலை உயர்வால் விறகு அடுப்பில் சமைக்க வேண்டுமா: பாஜ தலைவரிடம் பழங்குடியின பெண் வாக்குவாதம்

ஹாவேரி: பாஜ சார்பில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட மாநில தலைவர் நளின்குமார் கட்டீலிடம் , காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து இளம்பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜவினர், அவருக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பட்கி பகுதியில் பாஜ சார்பில் பழங்குடியினர் மக்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு, ஒன்றிய மற்றும் மாநில பாஜ அரசு செய்த நலத்திட்டங்களை பற்றி பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண், அவரது பேச்சை நிறுத்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதில், தற்போது காஸ் சிலிண்டர் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அன்றாட பயன்பாட்டு காஸ் சிலிண்டரின் விலையை நீங்கள் உயர்த்தினால், எங்களால் எப்படி வாங்க முடியும். நாங்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிடலாமா? உங்கள் வீட்டு பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு பணம் நிறைய கிடைக்கும்.  ஆனால் எங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும். சிலிண்டருக்கு 1,300 ரூபாய் கொடுக்க ஏழைகள் எங்கே போவது? என கேள்வி எழுப்பினார். இளம்பெண்ணின் பேச்சுக்கு, அங்கிருந்த பலரும் ஆதரவு கொடுத்தனர். இதனால் பாஜ நிர்வாகிகள், என்ன செய்வது என தெரியாமல் திணறினர்.

Related Stories: