அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்; காங். மாஜி முதல்வருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: பஞ்சாப் விஜிலென்ஸ் அதிரடி

அமிர்தசரஸ்: அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, அவரது ஆட்சி காலத்தில் அவரது சொந்த தொகுதியான சம்கவுர் சாஹிப்பில், சுற்றுலாத் துறை சார்பில்  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்காக சுமார் 1.47 கோடி ரூபாய்  செலவிட்டதாகவும், அவரது பதவி காலத்தில் மூன்று மாதத்திற்கு மட்டும்  சாப்பாட்டுக்கு ரூ. 60 லட்சம் செலவிட்டதாக புகார் எழுந்தது.  அதேபோல் சரண்ஜித் சிங் சன்னி மகனின் திருமணத்திற்காக அரசின் பணம்  முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்  அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியதால்,  சரண்ஜித் சிங் சன்னி மீதான முறைகேடு புகாரின் விசாரணை தீவிரமடைந்தது. இந்நிலையில் சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக பஞ்சாப் விஜிலென்ஸ் துறை, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதனால் அவர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு தடைபட்டுள்ளது. இதுகுறித்து சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ‘இதுவரை விஜிலென்ஸ் துறையிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன்’ என்றார். இதற்கிடையே வரும் சில நாட்களில் சரண்ஜித் சிங் சன்னி கலிபோர்னியா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: