டெல்லியில் நாளை வரை நடக்கிறது 11 நாடுகளின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு தொடக்கம்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாகிஸ்தான் தலைமை நீதிபதி பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் 11 நாடுகளின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடக்கிறது. கடந்த 2001ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய  நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. டெல்லியில் நேற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். அவர் தவிர மற்ற 11 நாடுகளின் தலைமை நீதிபதிகள் நேரடியாக பங்கேற்றனர்.

இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டில் சந்திரசூட் பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் நீதி வழங்குவதற்கான நவீன முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாய சூழல் நீதித்துறைக்கு ஏற்பட்டது. இப்போது நீதித்துறை நிறுவனங்களை மேம்படுத்துவது முக்கியம். இதற்காக மற்றொரு தொற்றுநோய்க்காக காத்திருக்கக்கூடாது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் 1.65 கோடி வழக்குகளையும், உயர் நீதிமன்றங்கள் 75.80 லட்சம் வழக்குகளையும், உச்ச நீதிமன்றம் 3,79,954 வழக்குகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்தது. இப்போது சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் மயமாக்கலின் பாதையை தொடர்ந்து வளர்த்து வருகிறது. இதனால் அனைத்து குடிமக்களும் நீதித்துறையை அணுகக்கூடியதாக மாற்றியது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் இல்லாதவர்களை அணுகுவதற்கான ஒரு கருவியாகவும் இது செயல்படுகிறது.

Related Stories: