திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே பழைய பொருட்கள் சேகரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பழைய வயர்களில் இருந்து செம்பு உள்ளிட்டவற்றை பிரித்து எடுக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பழைய வயர்களில் இருந்து பிளாஸ்டிக், செம்பு உள்ளிட்டறவற்றை பிரித்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இன்று பிற்பகலில் திடீரென வெல்டிங் செய்யும் இயந்திரத்திலிருந்து தீப்பொறி பறந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களில் விழுந்ததன் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது.

இதை கண்ட அத்தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையிலிருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதறிய தீப்பொறியால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: