கொடைக்கானல் சாலையில் தீ விபத்துகளை தவிர்க்க சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை-வனத்துறை நடவடிக்கை

பழநி : பழநி- கொடைக்கானல் சாலையில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் சோதனை நடத்துவதை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பழநியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் 67 கிலோ மீட்டர் தூரம் கொண்டது ஆகும். இதில் 55 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி விடும்.

அப்போது கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிரதான பாதை பழநி- கொடைக்கானல் சாலை ஆகும். தற்போது கொளுத்தும் வெயிலின் காரணமாக மலைப்பகுதியில் உள்ள செடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து சருகுகளாக உள்ளன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் புகைபிடித்து விட்டு சிகரெட் மற்றும் தீக்குச்சிகளை அணைக்காமல் அப்படியே சாலையில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். மேலும் வருவாய் நிலங்களில் காய்ந்த சருகளுக்கு தீ வைப்பர்.

இதனால் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.இதனை தடுக்க வனத்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து பழநி வனச்சரகர் பழனிக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது: பழநி தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி உஷார் படுத்தப்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் போன்றவற்றை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வனப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க இரவு நேரங்களில் கூடுதலான அளவில் வன அலுவலர்கள் கண்காணிப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: