ஊட்டி புத்தக திருவிழாவை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும்-மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பேச்சு

ஊட்டி : ஊட்டியில் முதன் முதலாக நடைபெறும் புத்தக திருவிழாவை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளர் கேட்டு கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா 2023 கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பங்கேற்று சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மழைத்துளிகள் சொல்லி சென்ற கதைகள் என்ற தலைப்பில் பேசினார்.

அவரது சிறப்புரையில், பள்ளி மாணவ, மாணவிகளான நீங்கள் ஓய்வு எடுத்து செய்ய வேண்டிய செயல்களை ஓய்வெடுத்தும், உடனடியாக செய்ய வேண்டிய செயல்களை உடனடியாகவும் செய்து, நல்ல கருத்துக்களை எடுத்து கொண்டு தேவையற்றவைகளை ஒதுக்கி வாழ்வில் நல்ல நிலையினை அடைய விடா முயற்சி மேற்கொள்ள வேண்டும். நீலகிரியில் முதல் முதலாக நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சியினை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும், என்றார்.

மேலும் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதைகள் என்ற தலைப்பில் நட்பு, அன்பு, அதிஷ்டம், நம்பிக்கை போன்றவை குறித்து கருத்துக்களை எடுத்துரைத்தார். முன்னதாக மாற்றுதிறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் எழுதிய பறக்கும் பூ என்ற புத்தகத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண் பெற்று கொண்டார்.

தொடர்ந்து காது கேளாதோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி, மாவட்ட நூலக அலுவலர் வசந்தமல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: