வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிசுடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் இன்று நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானிஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்துள்ளார்.  நேற்று அகமதாபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்த்து ரசித்தார். இதையடுத்து, மும்பை சென்ற அல்பானிஸ் அங்கு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் பங்கேற்று கலந்துரையாடினார். பின்னர், நேற்று மாலை டெல்லி வந்த அவர், பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  இந்தியா வருவதற்கு முன் ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களை சந்தித்த அல்பானிஸ், ``வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளின் வலுவான ஒத்துழைப்பு பிராந்திய நிலைத்தன்மைக்கு வித்திட்டுள்ளது,’’ எனக் கூறியிருந்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தடையற்ற வர்த்தகத்துக்கான பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம் கடந்தாண்டு டிசம்பரில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியாவின் 96 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கான சுங்கவரி உடனடியாக குறைக்கப்பட்டது. பதிலுக்கு இந்தியாவும் 85 சதவீத ஆஸ்திரேலிய இறக்குமதி பொருட்களுக்கான சுங்கவரியை குறைத்தது. இந்தியாவின் வர்த்தக ஒத்துழைப்பில் ஆஸ்திரேலியா 17வது பெரிய நாடாக உள்ளது. அதே போல், ஆஸ்திரேலியாவின் 9வது வர்த்தக நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், இன்று இரு பிரதமர்களுக்கு இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், முதலீடு, லித்தியம், தாமிரம், உள்ளிட்ட கனிம வளங்கள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்னை குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மெல்போர்ன் பல்கலைக் கழக துணைவேந்தர் டன்கன் மஸ்கெல் பேசிய போது, ‘’இந்தியாவில் சென்னை பல்கலைக் கழகம், சாவித்ரி புலே புனே பல்கலைக் கழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகிய 3 பல்கலை.களில் இளங்கலை அறிவியல் படிப்பில் இரட்டை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் முதல் 2 ஆண்டுகள் உள்நாட்டிலும் அடுத்த 2 ஆண்டுகள் மெல்போர்ன் பல்கலை.யிலும் பயில வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

* பாஜ தலைவர்களுடன் சந்திப்பு அகமதாபாத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை கண்டு களித்த பிறகு, காந்தி நகர் சென்ற மோடி அங்கு குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல், மாநில பாஜ தலைவர் சிஆர். பாட்டீல் மற்றும் மாநில பாஜ பொது செயலாளர் ரத்னகர் ஆகியோரை சந்தித்து, பாஜ ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

Related Stories: