திருச்சி அருகே பயங்கரம்; அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை

திருவெறும்பூர்: திருச்சி அருகே அதிமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை 3 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான்கோட்டை ஈச்சங்காட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் கோபி (எ) கோவிந்தராஜ் (32). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்றிரவு திருவெறும்பூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு கோபி சென்றார். பின்னர் 9 மணியளவில் பாதியிலேயே எழுந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார்.

வழியில் துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தார் கோபி. சிறிது நேரம் கழித்து டிபனை வாங்க ஓட்டலுக்குள் பணம் செலுத்த சென்றபோது, அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல் அரிவாளால் அவரை வெட்ட வந்தனர். நகர்ந்ததால் ஓட்டல் கல்லாப்பெட்டியில் வெட்டு விழுந்தது. அதிர்ச்சியுடன் கோபி ஓடினார். அவரை விரட்டி சென்று ஓட்டல் முன்பு கோபியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த எஸ்பி சுஜித்குமார், துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. கொலையான கோபிக்கு திருமணமாகவில்லை. ரவுடி பட்டியலில் உள்ளார். குடும்பத்தை விட்டு பிரிந்து 4 ஆண்டுகளாக தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அண்ணா வளைவு அருகே துக்க நிகழ்ச்சியில் நடந்த மோதல் தொடர்பாக கோபி மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான கோபி, நேற்று மாலை வரை நீதிமன்றத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்தது யார், எதற்காக நடந்தது என பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: