ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி லாலுவிடம் சிபிஐ 2 மணி நேரம் விசாரணை

பாட்னா: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக, நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்று மோசடி செய்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தபோது பீகாரை சேர்ந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களின் நிலத்தை குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக லாலுவின் மனைவி ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம்  சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் லாலுவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. பந்தாரா பார்க்கில் உள்ள லாலுவின் வீட்டுக்கு நேற்று காலை 10.40 மணியளவில் இரண்டு கார்களில் வந்த 5 சிபிஐ  அதிகாரிகள் லாலுவிடம் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில்  லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: