பாலிவுட் நடிகைகள் பெயரில் கொரோனா போலி தடுப்பூசி சான்றிதழ்: விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவு

அகமதாபாத்: பாலிவுட் நடிகைகள் பெயரில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, பாலிவுட் பிரபலங்கள் பெயரில் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் வெளியான விவகாரம் பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. இதன்படி, நடிகைகள் ஜூஹி சாவ்லா, ஜெயா பச்சன் மற்றும் மகிமா சவுத்ரி ஆகியோர் குஜராத்தில் இல்லாதபோது, ஜுனாகட் மாவட்டத்தில் இருப்பது போன்று அவர்களது பெயரில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது பற்றி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. இம்ரான் கெடாவாலா கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் அவையில் கூறும்போது, ‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், அடையாள அட்டைகளை காண்பிக்காமல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடத்தப்பட்டது. இதில், அடையாள அட்டைகள் இல்லாத பிச்சைக்காரர்கள் அல்லது புலம்பெயர்ந்தோரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, இந்த பெயர்களை கொண்ட நபர்கள் வந்தபோது, முகாமில் இருந்த அதிகாரி அவசர கதியில் பெயர்களை எழுதி உள்ளார்’ என்றார். இதுபற்றி முறையான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: